சுவாதி விவகாரம்: மீண்டும், மீண்டும் மன்னிப்பு கேட்க்கும் ஒய்.ஜி.மகேந்திரன்

சனி, 9 ஜூலை 2016 (08:08 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு சிலர் இந்த விவகாரத்தை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் அனுகி கருத்து தெரிவித்தனர்.


 
 
அதில் பிள்ளையார் சுழி போட்டு சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர் என ஒய்.ஜி.மகேந்திரனை கூறலாம். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், பிலால் மாலிக் என்னும் முஸ்லீம் இளைஞர் தான் சுவாதியை கொலை செய்தார் எனவும், ராகுல் காந்தி, திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்டுகளை கொச்சைப்படுத்தி பதிவிட்டிருந்தார்.
 
இவரின் இந்த பதிவு பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. இதனையடுத்து அவர் அந்த பதிவுக்கு விளக்கம் அளித்தார். அதில், அந்த முகநூல் பதிவு வேறு நபர் வெளியிட்ட கருத்து என்றும், அதை ஷேர் மட்டும் செய்ததாக கூறிய ஒய்.ஜி.மகேந்திரன், அந்தக் கருத்தில் தனக்கு உடன்பாடு உள்ளது என கூறினார்.
 
இதனை கண்டித்து இந்திய தேசிய லீக் நடிகர் சங்கம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. மேலும் அவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தது. இந்நிலையில் மீண்டும் ஒய்.ஜி.மகேந்திரன் தனது செயலுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை இந்திய தேசிய லீக் கட்சிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
 
அந்த கடிதத்தில், நான் ஏற்கனவே முகநூலில் மன்னிப்பு கேட்டு உள்ளேன். மீண்டும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். நான் எந்த ஒரு மதத்துக்கும் பாராபட்சமாக இருந்தது இல்லை. என்னுடைய நாடகக் குழுவில் சுமார் 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே நான் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல.
 
கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல், மதம் சார்ந்த அமைப்புகளில் இல்லை. நாடகம் மற்றும் சினிமா போன்றவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் எப்போதுமே இது போன்று செய்தது இல்லை.
 
இந்தமுறை கவனக்குறைவால் நடந்துவிட்டது. அதற்காக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதுக்காக மன்னிப்பு கோருகின்றேன். என்னுடைய இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ரமலானுக்கு அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள் என மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து, இன்று நடக்க இருந்த நடிகர் சங்க முற்றுகைப் போராட்டத்தை வாபஸ் பெற்றது இந்திய தேசிய லீக் கட்சி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்