ஒரே நிற ஹெல்மெட்டால் வேறு வேறு கணவருடன் சென்ற பெண்கள்

வெள்ளி, 3 ஜூலை 2015 (19:49 IST)
ஒரே நிற ஹெல்மெட் அணிந்திருந்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், வேறு வேறு கணவருடன் இரண்டு பெண்கள் சென்றுள்ளனர்.
 

 
தமிழகம் முழுவதிலும், கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தே பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ஒரே நிற ஹெல்மெட்டால் 2 பெண்கள், வேறு வேறு ஆண்களுடன் பயணம் செய்துள்ளனர்.
 
திருப்பூரை அடுத்த தாராபுரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவர், தனது மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்களில் சென்றுள்ளார். இடையில் பெட்ரோல் போடுவதற்காக, பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
 
அப்போது, காளிபாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவரும், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அதே பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். இருவருமே வெள்ளை சட்டை அணிந்துள்ளனர். மேலும், இருவருமே ஒரே நிற ஹெல்மெட்டையும் அணிந்து வந்துள்ளனர்.
 
பின்னர், பெட்ரோல் போட்டு விட்டு வந்த ரங்கசாமியின் மோட்டார் சைக்கிளில் முத்துசாமியின் மனைவி ஏறிச் சென்றுள்ளார். அதேபோல் முத்துச்சாமியின் மோட்டார் சைக்கிளில் ரங்கசாமியின் மனைவி ஏறிச் சென்றுள்ளார்.
 
சிறிது தூரம் சென்றதும் மோட்டார் சைக்கிளில் வருவது தனது கணவர்தானா? என்று ரங்கசாமியின் மனைவிக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து வண்டியை நிறுத்த சொல்லியுள்ளார். பிறகு நடந்த விஷயம் தெரியவர தனது கனவருக்கு தொலைபேசியில் அழைத்து வரச்செய்துள்ளார். பின்னர் இருவரும் அவரவர் மனைவியுடன் சென்றுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்