மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு குட் நியூஸ்..!!
புதன், 3 ஜனவரி 2024 (13:39 IST)
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒவ்வொரு மாதமும் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதை அடுத்து 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், இந்த மாதம் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கும் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.