திருமண விழாவிற்குச் சென்று திரும்பிய பெண் மருத்துவர்கள்: கார் கவிழ்ந்து ஒருவர் பலி

வியாழன், 26 மார்ச் 2015 (09:55 IST)
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் பலியானார்.
 
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் மகள் பிரணவப்பிரியா. அவருக்கு வயது 27. இவர் மதுராந்தகம் அருகேயுள்ள சின்ன கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா, அவரது தோழிகளான திருவல்லிக்கேணியை சேர்ந்த மருத்துவர் பிரீத்தி, நீலாங்கரையைச் சேர்ந்த மருத்துவர் திருமேனி ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றனர்.
 
அந்தத் திருமண விழா முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார்.
 
அந்தக் கார் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பிரணவப்பிரியாவின் கட்டுப்பாட்டை இழந்தது.
 
இதனால் சாலயில் தாறுமாறாக ஓடி கால் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டபடி சாலையின் மறுபக்கத்திற்குச் சென்று கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் மருத்துவர் பிரணவப்பிரியா காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழிகள் பிரீத்தி, திருமேனி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
 
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த, கிளியனூர் காவல்துறையினர் பிரணவப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பிரணவப்பிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் அச்சிறுப்பாக்கத்தில் மருந்து கடை, நகைக் கடை, ஜவுளி கடை, மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பிரணவப்பிரியா நேற்று முன்தினம்தான் அச்சிறுப்பாக்கத்தில் சொந்தமாக கிளினிக் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்