’சசிபெருமாள் மகன் மற்றும் மகளை கைது செய்தது கண்மூடித்தனம்’ - கருணாநிதி கண்டனம்

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (19:11 IST)
சசிபெருமாள் மகன் மற்றும் மகளை கைது செய்தது கண்மூடித்தனம் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுவிலக்குக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுப்பப்பட்டு, அதன் காரணமாக நடந்து வரும் போராட்டங்களை எல்லாம் நான் பட்டியலிட்டுக் காட்டியதோடு, தமிழக அரசு மதுவிலக்கினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று நான் நேற்றே வலியுறுத்தினேன்.
 
நான் மட்டுமல்ல; தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதுகுறித்த வேண்டுகோளினை விடுத்திருந்தார்கள். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரையே கொடுத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினரே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவருகிறார்கள். 
 
குறிப்பாக சசிபெருமாள் அவர்களுடைய மகன் விவேக், மகள் கவியரசி உட்பட 28 பேர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். காவல் துறையினரோ அவர்களோடு இணக்கமாகப் பேசிச் சமாதானம் செய்ய முயற்சிக்காமல், அந்த 28 பேரையும் கைது செய்து நிலைமையை மோசமாக்கி இருக்கிறார்கள்.
 
சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமி. அந்தச் சிறுமியை கூட இரக்கமின்றிக் கைது செய்கின்ற அளவுக்கு அதிமுக அரசு சென்றுள்ளது. சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன் நவநீதன் ஆகியோரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அ.தி.மு.க. ஆட்சியினர் கண் மூடித்தனமாகக் கைது செய்திருக்கிறார்கள்.
 
இதுபோலவே நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி மதிமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்திக் காயப்படுத்தியதோடு, 10 ரவுண்டுகள் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சும் நடத்தியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்