தேர்தல்உத்திவகுப்பாளரானபிரசாந்த்கிஷோர் நேற்று தமிழகம் வந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தேர்தல் உத்தி வகுப்புகளை நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர். கடந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவரை டெல்லியில் சந்தித்ததால் அதிமுக வுக்கு அவர் தேர்தல் வேலைகளை செய்யப்போகிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் அவர் அதிரடியாக நேற்று தமிழகத்துக்கு வந்து மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் யாருக்காக வேலை செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது
ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடந்த 4 வருடங்களாக வேலை செய்தது பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிட்டிகல் ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்புதான். ஆனால் அதற்காகக் கிட்டத்தட்ட சுமார் 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. அவ்வளவுப் பெரிய தொகையை மக்கள் நீதி மய்யத்தால் செலவு செய்யமுடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் அதிமுக போன்ற பெரியக் கட்சியால் இத்தகைய செலவுகளை செய்ய முடியும் என்பதால் பிரசாந்த் கிஷோர் எந்தப் பக்கம் சாய்வார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.