மனைவியை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்க 4 கொலைகள் செய்த தொழிலதிபர்: 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது

வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (08:01 IST)
சென்னை கொருக்குப்பேட்டையில், மனைவியின் கொலைக்கு பழிக்குப்பழியாக 4 கொலைகள் செய்த தொழில் அதிபர், 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
 
சென்னை கொருக்குப்பேட்டை, இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான அவருக்கு வயது 55. இவருடைய மகன் பிரகாஷ் அவருக்கு வயது 27. பிரகாஷ் கடந்த 11 ஆம் தேதி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என்று புகார் செய்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில், 13 ஆம் தேதி தனது தந்தை ராமச்சந்திரனை யாரோ கடத்தி வைத்துள்ளதாக காவல் நிலையத்தில் மீண்டும் பிரகாஷ் புகார் செய்தார். இதையடுத்து கடத்தல் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனை தீவிரமாக தேடி வந்தனர்.
 
ராமச்சந்திரனின் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரித்தபோது அவர் கொடுங்கையூர் பகுதியில் இருப்பது தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், ராமச்சந்திரனை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடத்தப்படவில்லை என்பதும், தனது நண்பரான தியாகராஜன் என்பவருடன் சேர்ந்து நாடகம் ஆடியதும் தெரியவந்தது.
 
கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரான அன்பு ஞானத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், மனைவியின் கொலைக்கு பழிக்குப்பழியாக 4 கொலை செய்தார். அதற்கு தான் உதவியாக இருந்ததாகவும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதால் அன்பு ஞானத்துரையை மிரட்டி பணம் பறிப்பதற்காக இந்த நாடகம் ஆடியதாகவும் அவர் ‘பகீர்’ தகவலை வெளியிட்டார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தது
 
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு ஞானத்துரை தொழில் அதிபர். இவரது நெருங்கிய நண்பர் ராமச்சந்திரன். 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த அன்பு ஞானத்துரையின் மனைவி ஜான்சிராணி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
 
இது குறித்து கொடுங்கையூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தொழில் போட்டி காரணமாக அன்பு ஞானத்துரையின் மனைவி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக மாரியப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்த கொலை வழக்கில் இருந்து 1996 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த மாரியப்பனை ராமச்சந்திரனின் துணையோடு அன்பு ஞானத்துரை பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்து, உடலை கூடுவாஞ்சேரி பகுதியில் புதைத்துவிட்டார். ஜான்சிராணியை கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்த முத்து என்பவரையும் 1998 ஆம் ஆண்டு கொலை செய்தார்.
 
மாரியப்பன் சிறையில் இருந்தபோது, ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராமச்சந்திரனின் மற்றொரு நண்பரான முருகன் என்பவரிடம், அன்பு ஞானத்துரையின் மனைவியை தான் கொலை செய்யவில்லை. அவருடைய தம்பிதான் கூலிப்படை வைத்து கொலை செய்தார் என்று கூறியிருந்தார். மாரியப்பன் கொலை செய்யப்பட்டதும் முருகன் சிறையில் இருந்தபடியே அன்பு ஞானத்துரையை மிரட்டி பணம் பறித்துவந்தார்.
 
1999 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த முருகனையும் அன்புஞானத்துரை கொலை செய்தார். 2002 ஆம் ஆண்டு அன்பு ஞானத் துரையின் தம்பி பால் அன்பழகன் சென்ற கார் மீது லாரியை மோதி கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடினார். இந்த தகவல்கள் அனைத்தும் ராமச்சந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, 4 கொலைகள் செய்ததாக தொழில் அதிபர் அன்பு ஞானத்துரையை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கு உதவியாக இருந்த ராமச்சந்திரனையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்குகள் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 4 கொலை வழக்குகளில் சிக்காமல் இருந்துவந்த தொழில் அதிபர், மிரட்டி பணம் பறிக்க முயன்ற கூட்டாளியின் கடத்தல் நாடகத்தால் சிக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்