நரபலி விசாரணையை தடுப்பது ஏன்? அதிகாரமிக்கவர்களை காப்பாற்றுவதற்கா?

திங்கள், 14 செப்டம்பர் 2015 (15:46 IST)
நரபலி விசாரணையையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “சட்டவிரோதமான கிரானைட் கொள்ளை மாநிலத்தின் சுற்றுப் புறச் சூழலை மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் அரசின் கஜனாவிற்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க 2014-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு சகாயத்தை சிறப்பு ஆணையராக நியமித்தது.
 
அவரது விசாரணையில் இந்த கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக கிரானைட் குவாரி நடத்துபவர்களால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
 
அந்தப் புகாரின் அடிப்படையில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு சகாயம் உத்தரவிட்டார். ஆனால் அவர் போட்ட உத்தரவை மதிக்க மறுத்து, தோண்டியெடுக்கும் பணியை தாமதம் செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நடக்க வேண்டிய விசாரணையையும், நரபலி விசாரணையையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. 
 
அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைக்க வழி செய்வது தான் அரசின் கடமையே தவிர, அதிகாரமிக்க ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்கு இல்லை" என்று சாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்