61 வயதிலும் திமுக இளைஞரணி செயலாளர்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

புதன், 20 ஆகஸ்ட் 2014 (20:12 IST)
தமிழக கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநாடு விழுப்புரத்தில் நடந்தது. மாநாட்டில் தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:–
 
கட்சி தொடங்குவதற்கு முன்பே சிலர் நான்தான் அடுத்த முதல்வர் என சொல்லி திரிகின்றனர். ஆனால் 1949 ஆம் ஆண்டில் தி.மு.க. தொடங்கப்பட்டு, 1957–ல் முதல் தேர்தலை சந்தித்தது. அதற்கு முன்னதாக 1956–ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என 2 பெட்டி வைக்கப்பட்டு அதன்மூலம் தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு அத்தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றிபெற்றோம்.
 
பின்னர் 1962–ல் 50 இடங்களை பெற்றோம். 1967–ல் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தபோது அண்ணா மக்கள் நம்மை நம்பி மிக பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். எனவே நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றார்.
 
தி.மு.க. பொருளாளராக இருந்தாலும் எனக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு மேல் விரும்பம் அதிகம் அதனால்தான் 61 வயதாகியும் அந்த பொறுப்பை இன்னமும் வைத்துள்ளேன். தி.மு.க.வில் எத்தனையோ துணை அமைப்புகள் இருந்தாலும் மிகவும் வலுவானது இளைஞரணி.
 
1989 ஆம் ஆண்டு முழுமையான தகுதி அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட 16 ஆயிரம் மக்கள் நலபணியாளர்களை அடுத்துவந்த அ.தி.மு.க. அரசு பணிநீக்கம் செய்தது. மீண்டும் தி.மு.க. அவர்களுக்கு பணி நியமனம் அளித்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அவர்களை பணிநீக்கம் செய்தது. அதன்பின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்ற பின்பு மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் உயர்நீதிமன்றம் பணிநிக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பணியமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தாவிட்டாலும் நவம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த அரசு இதை நடைமுறைபடுத்தாமல் மேல்முறையீடு செய்யும்.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்