முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?: என்ன பிரச்சனை அவருக்கு!

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (10:40 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 
 
நேற்று இரவு தீயாய் பரவிய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவு செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு என பலரும் டிவியை நள்ளிரவில் ஆன் செய்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனவும், சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவலும் வந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னரே பலரும் சற்று நிம்மதியடைந்தனர்.
 
ஆனால் முதல்வர் இன்னமும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. இதனால் முதல்வருக்கு சாதாரண காய்ச்சல் தானா, வேறு ஏதாவது பிரச்சணையா என்ற சந்தேகங்கள் வந்தன.
 
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நமக்கு கிடைத்த தகவல், நேற்று இரவு முதல்வருக்கு திடீரென்று சர்க்கரையின் அளவு அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்திருக்கிறார். நேரம் செல்லச் செல்ல மூச்சுத்திணறல் அதிகமாக அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
 
ஆம்புலன்ஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு ஐ.சி.யூ-வில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு ஒரு மணி அளவில் மூச்சுத்திணறல் சீராகியுள்ளது. பின்னர் உடனே போயஸ் கார்டனுக்குக் கிளம்ப வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாலும் அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இன்று முழுவதும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்ற தகவலும் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்