கரூர் அருகே காந்திகிராமம் புனித தெரசா மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மூச்சுக்கு மூச்சு அம்மா அம்மா என்று கூறிய இவர்கள், தாய்க்குலத்தை போற்றும் வகையிலும் பேசிய நிலையில், அதே தாய்க்குலத்தினர் தரையில் அமர்ந்து நலத்திட்ட உதவிகளை வாங்கியதை கண்டுகொள்ள வில்லை. பெண்களுக்காக உழைத்து வரும் அம்மா ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் வாங்க வந்திருந்த தாய்மார்கள் தரையில் அமர்ந்திருந்த காட்சி மிகவும் வருத்தத்தை அளித்தது. அந்த தாய்மார்களுக்கும், வயதான பெண்மணிகளுக்கும் இருக்கை வசதி செய்து தரவில்லை.
இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களுக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் குறுஞ்செய்தி மூலம் அழைக்கப்பட்டது. அங்கே சென்ற செய்தியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தரவில்லை ஆகையால் செய்தியாளர்கள் பலரும் நின்று கொண்டே தான் செய்தி சேகரித்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம், விபத்து நிவாரண உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், வேளாண்மைத்துறை சார்பிலும், புது வாழ்வுத்திட்டம் சார்பிலும் என்று மொத்தம் 1386 நபர்களுக்கு 8 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரத்து 969 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.