தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பனின் பின்னணி தெரியுமா?

சனி, 10 செப்டம்பர் 2016 (18:42 IST)
ரியோ பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு. 


 

 
இவருக்கு பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதலமைச்சர் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இதற்கு முன்பு பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் 1.74 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. ஆனால், மாரியப்பன் 1.89 மீட்டர் தாண்டி, புதிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
 
அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார். இன்னும் பல்வேறு பரிசுகள் அவருக்கு அறிவிக்கப்படலாம். வாழ்த்துகள் குவியும்.


 

 
ஆனால் எவ்வளவு இடர்பாடுகளுக்கு நடுவில் அவர் ஒலிம்பிக் வரை சென்றார் என்று இங்கு யாருக்கும் தெரியாது. 
 
சேலத்திலிருந்து 50 கி.மீ தூரமுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டி என்ற ஊரில்தான் அவர் பிறந்து வளந்தது எல்லாம். இவருக்கு 5 வயது இருக்கும் போது, பள்ளிக்கு செல்கையில் ஒரு பேருந்து அவரின் கால் மீது மோதிவிட்டது. அதன்பின் அந்த காலில் வளர்ச்சி இல்லாமல் போய்விட்டது.
 
பள்ளியில் படிக்கும்போதே மாரியப்பனுக்கு விளையாட்டில் ஆர்வம். தொடக்கத்தில் வாலிபாலில்தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஆனால், அவருக்குள் உயரம் தாண்டுதலுக்கான திறமை ஒளிந்திருப்பதை, பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் கவனித்து ஊக்கம் கொடுத்துள்ளார். அதுதான், அவரின் வாழ்க்கைய மாற்றியுள்ளது.


 

 
அதன்பின் அதில் அதிக ஆர்வத்தோடு பயிற்சி செய்துள்ளார் மாரியப்பன். 2013ம் ஆண்டு பெங்களூரில் நடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றபோது, பயற்சியாளர் சத்தியநாராயணாவின் கண்ணில் பட்டுள்ளார் மாரியப்பன். அவரிடம் இருக்கும் திறமையை புரிந்த சத்தியநாராயணா, பெங்களூரிலேயே தங்க வைத்து அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அதுதான், அவரை ஒலிம்பிக் வரை கொண்டு சென்றுள்ளது.
 
அவரது குடும்பத்தை பொறுத்தவரை, அவரது தந்தை தங்கவேலு செங்கல் சூளையில் பணிபுரிகிறார். அவரது தாய் சரோஜா சைக்கிள் காய்கறிகள் எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார். அவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வசிப்பது வாடகை வீடு. 21 வயதான மாரியப்பன்,  சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த ஆண்டுதான் பி.பி.ஏ. முடித்துள்ளார். கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்றதோடு, அவரின் தாயாருக்கு உதவியாக காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளார் மாரியப்பன். 


 

 
அவரின் தந்தை தங்கவேலுவின் மருத்துவ செலவுக்காக ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று, இன்னமும் அதற்கு மாதா மாதம் வட்டியும், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அசலையும் செலுத்தி வருகிறது அவரின் குடும்பம்.
 
காய்கறி விற்றும், செங்கல் சூளையில் சம்பாதிக்கும் பணம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இருந்தது. எனவே விளையாட்டுத் துறையில் முன்னேற அவருக்கு உதவிகள் தேவைப்பட்டது. நல்ல வேளையாக அவருக்கு உதவ பலர் முன்வந்தனர். அவருடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் என பலரும் அவருக்கு பொருளாதார ரீதியில் உதவினர்.
 
2012ம் ஆண்டு வட்டார மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்தார் மாரியப்பன். இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
 
தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள பரிசு தொகை அவரின் குடும்ப பாரத்தை போக்கும். தங்கள் ஊரை சேர்ந்த மாரியப்பன், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் அவரின் சொந்த கிராம மக்கள். வாலிபர்கள், மாரியப்பனுக்கு பேனர் வைத்துள்ளனர்.
 
மாரியப்பன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அவரின் தாய் சரோஜா “ என் மகன் மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளான். தற்போது பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளான். அவனுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
வாழ்த்துவோம்...

வெப்துனியாவைப் படிக்கவும்