தமிழகத்தில் 60 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகை நோயின் பிடியில் சிக்கியுள்ளனர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஞாயிறு, 21 ஜூன் 2015 (01:48 IST)
தமிழகத்தில் 60 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகை நோயின் பிடியில் சிக்கியுள்ளனர் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சுகாதார ஆய்வின்படி தமிழகத்தில் உள்ள 15 வயதிலிருந்து 49 வயதிற்குட்பட்ட பெண்களில் 49.2 சதவீதத்தினர் இரத்த சோகைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிலும் குறிப்பாக 56 சதவீத கர்ப்பிணிப் பெண்களும், ஆறு மாதத்திலிருந்து மூன்று வயதிற்குரிய குழந்தைகளில் 60 சதவீதம் குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்தியன் கவுன்சில் ஃபார் சில்ட்ரன் வெல்பேர் என்ற தொண்டு நிறுவனத்தின் இணைச் செயலாளர் , அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்காததும் இது போன்ற இரத்த சோகை நோய்கள் வரக் காரணம் என்று கருத்துக் கூறியுள்ளார்.
 
தர்மபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து சிசுமரணங்கள் நிகழ்ந்த போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவிகள் குறித்து தம்பட்டம் அடித்தது அதிமுக அரசு.
 
ஆனால், இன்றைக்கு 60 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகை நோயின் பிடியில் சிக்கியுள்ளார்கள் என்று வெளிவந்துள்ள இந்த சர்வேயின் முடிவுகளைப் பார்க்கும் போது மகப்பேறு நிதியுதவி அளிக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. அதுவும் ஒரு பெண் முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் பெண்களே இது மாதிரி நோயினால் துயரப்பட வேண்டியதிருக்கிறது என்பது வேதனையாக இருக்கிறது.
 
எனவே, எந்த வித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல், கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தை வெளிப்படையாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலும் செயல்படுத்துமாறு அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரத்த சோகை நோய் வராமல் பாதுகாத்து, மாநிலத்தில் திரும்பத் திரும்ப நடக்கும் சிசு மரணங்களைத் தடுக்க வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பாகும்.
 
நாட்டின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்வு பெறும் உரிமை படைத்தவர்கள் என்பதை அதிமுக அரசு உணர்ந்து, அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் தன் கடமையைச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்