ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதினி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

செவ்வாய், 28 ஜூன் 2016 (19:14 IST)
ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதினி வழக்கில், குற்றவாளிக்கு காரைக்கால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.


 

 
காரைக்காலில் வசிக்கும் ஜெயபால் என்பவர் மகள் வினோதினி, சென்னை சைதாப்பேட்டையில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, சுரேஷ் என்ற கட்டிடத் தொழிலாளி, அவரை திருமணம் செய்து வைக்குமாறு வினோதினியின் பெற்றோரை வற்புறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
 
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், 2012ஆம் ஆண்டு, பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது வினோதினி முகத்தில் ஆசிட் வீசினான். இதில் முகம் முழுவதும் வெந்து, கண் பார்வை பறி போன நிலையில், உயிருக்குப் போராடி வந்த வினோதினி, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதையடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காரைக்கால் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.லட்சம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தது.
 
அதன்பின் மகளின் மரணத்தில் மனமுடைந்த வினோதினியின் தாயாரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இரு உயிர்கள் பலியாக காரணமாக இருந்த சுரேஷ் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
 
அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காரைக்கால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து இன்று உத்தரவிட்டனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்