பிஆர்பி நிறுவனத்தில் நரபலி? - சகாயம் குழுவினர் ஆய்வு

சனி, 12 செப்டம்பர் 2015 (16:46 IST)
பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் வளாகத்தில் மனிதர்களை நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மதுரையில் சகாயம் குழுவினர் இன்று ஆய்வு நடத்தினர்.
 
பிஆர்பி நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் சேவற்கொடி என்பவர் கொடுத்த புகாரையடுத்து மேலூரை அடுத்த சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் உள்ள பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் வளாகத்தில்  சகாயம் ஆய்வு செய்தார்.
 
அப்போது, நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்களின் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டியெடுக்க காவல்துறையினர் முயற்சி செய்தபோது, எலும்புகள் சேதமடைய வாய்ப்பிருப்பதால், மண்வெட்டி மூலம் தோண்டுமாறு சகாயம் கட்டளையிட்டார். அதன் அடிப்படையில் தோண்டும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
 
மேலும் கீழவளவு பகுதியில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்தும் சகாயம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்