விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டறிக்கை

ஞாயிறு, 29 நவம்பர் 2015 (15:22 IST)
காங்கிரஸ கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது புகார் கூறிய விஜயதாரணியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கூறி அக் கட்சியின் மாவட்ட தலைவர்கள்  49 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


 

 
அந்த கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இழந்த பெருமையை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நவம்பர் 1, 2014 அன்று நியமிக்கப்பட்டார்.
 
கடந்த ஓராண்டு காலமாக காங்கிரஸ் இயக்கத்திற்கு புத்துணர்ச்சி வழங்கி வலிமையை ஏற்படுத்துகிற வகையில் பல்வேறு கட்சி நடவடிக்கைகளை ஓய்வு ஒழிச்சலின்றி தொடர்ந்து செய்து வருகிறார்.
 
தமது முழு சக்தியையும் பயன்படுத்தி இயக்கப் பணியாற்றி வருகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது பல்வேறு அவதூறு வழக்குகளைத் தொடுத்து கடுமையான அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டு வருகின்றன.
 
இவற்றை எதிர் கொள்வதில் தமிழக காங்கிரஸ் கட்சி என்றுமே தயங்கிய தில்லை. ஆனால், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே தொண்டர்கள் செல்வாக்கு இல்லாத ஒருசிலர் தலைவர் இளங்கோவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கட்சியை இழிவுபடுத்துகிற பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
 
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் இளங்கோவனிடம் முறையிட்டபோது நடந்து கொண்ட முறையை எவருமே ஏற்றுக் கொள்ள முடியாது. 
 
எவர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கான புகாரை தாங்கள் வழங்கினால் பரிசீலிப்பதாக தலைவர் இளங்கோவன் கூறினார். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அராஜகப் போக்கோடு வலியுறுத்திக் கூறியது எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இயல்பாகவே எவரையும் துச்சமென நினைத்து மதிக்காத ஆணவப்போக்கு கொண்டு விஜயதாரணி கட்சிக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் செயல்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.
 
மேற்கூறப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் பேசாததை எல்லாம் பேசியதாக இட்டுக்கட்டி மகிளா காங்கிரசைச் சேர்ந்த சாந்தி சீனி, மானஸா பாத்திமா ஆகியோர் காவல் நிலையத்திற்குச் சென்று கிரிமினல் புகார் கொடுத்ததைவிட கட்சிவிரோத நடவடிக்கை வேறு எதவும் இருக்க முடியாது.
 
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தலைவர் இளங்கோவன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலமாக கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னைகளை காவல்துறையை நாடியதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்தவர்கள் மீது காங்கிரஸ் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பெண்ணின விடுதலைக்காப் பாடுபட்ட பெரியாரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் இளங்கோவன் பெண்ணினத்தை இழிவு படுத்தினார் என்று சொல்வதை விட அப்பட்டமான அவதூறு வேறு இருக்க முடியாது.
 
எதற்கும் கட்டுப்படாமல் எவரையும் மதியாமல் யாரையும் துச்சமென கருதி ஆணவத்தோடு செயல்பட்டு வருகிற விஜயதாரணியை மகிளா காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் தலைமை நீக்குவதோடு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 
காங்கிரஸ் இயக்கத்தின் கலாச்சாரத்திற்கு இழுக்கு தேடுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருகிற விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமே தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக ஆகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது.
 
கடந்த ஓராண்டு காலமாக கட்சி வளர்ச்சிக்காக செய்த உழைப்புகள் வீணாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எனவே, அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரசில் நிலவி வருகிற ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு காரணமான விஜயதாரணி உள்ளிட்டவர்கள் மீது உடனடியக நடவடிக்கை எடுத்து கட்சியில் கட்டுப் பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்