சினிமாவில் தவறுகளை தட்டிக்கேட்பது போல நிஜ வாழ்க்கையிலும் தட்டிக்கேட்பேன் - விஜயகாந்த்

திங்கள், 6 ஏப்ரல் 2015 (17:33 IST)
தேமுதிகவுக்கு ஏறுமுகம், ஜெயலலிதாவுக்கு இறங்கு முகம் என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 
தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் நடத்துகிறார்கள். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். அங்கு அணை கட்டுவது எப்போது தோன்றியது என எனக்கு தெரியும்.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என குண்டுராவ் கூறினார். அதற்கு எம்ஜிஆர், இந்திராகாந்தியிடம் சென்றார். பிரச்சனை முடிவுக்கு வந்தது. அதனால் தான் இப்போது சொல்கிறேன், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியிடம் செல்ல வேண்டும். விவசாயிகளோடு நானும் வருகிறேன். 
 
காரணம் நான் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். தமிழக எம்பி.க்கள் சோனியா வீட்டுக்கு செல்ல வேண்டியது தானே. சோனியா வீட்டு முன் உட்காருங்கள். அவர், விவசாயிகளுக்கு நல்லது செய்வார். அதனால் அவர், நமக்கு செய்து கொடுப்பார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளது. என்ன ரூ.250 கோடியா செலவிட போகிறது? பயப்பட தேவையில்லை. ஒதுக்கிய பணத்தில் டீ, காபி, டிபன் சாப்பிட்டு ஊழல் செய்து கொள்வார்கள். சும்மா உசுப்பேத்தாதீங்க.

ஜெயலலிதா குற்றவாளி என்று நான் சொல்லவில்லை. பெங்களூரில் ஒரு வக்கீல் சொல்கிறார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் கூட்டுச்சதி செய்துள்ளார்கள் என்கிறார். தேசிய கொடியுள்ள காரில் சென்ற அவருக்கு இதை விடவா கேவலம் வேண்டும். 
 
இதை நாங்கள் கூறினால், சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள். நான் கையை உயர்த்தினால், அதற்கு ஒரு வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயப்பட வேண்டும். 
 
சினிமாவில் தவறுகளை தட்டிக்கேட்டு பழக்கப்பட்டு விட்டேன். அதேபோல் நிஜ வாழ்க்கையில் தவறு செய்பவர்களையும் தட்டிக்கேட்காமல் இருக்க மாட்டேன். சட்டசபையில் எங்களுக்கு இறங்கு முகம் என்றார்கள். நிச்சயமாக எங்களுக்கு இது ஏறுமுகம். ஜெயலலிதாவுக்குதான் இறங்குமுகம். 10 ஆம் தேதிக்கு அப்புறம் தீர்ப்பு வந்துவிடும். அதன்பிறகு நீங்கள் நிரந்தரமாக கம்பி எண்ண போகிறீர்கள் என்று விஜயகாந்த் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்