மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும்: தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்

Ilavarasan

புதன், 4 ஜூன் 2014 (15:36 IST)
மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டுமென தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தேமுதிக ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
கூட்டத்தில், தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என தமிழக முதலமைச்சர் அறிவித்தாலும், ஆங்காங்கே மின்வெட்டு இருந்து வருகிறது. தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் குறித்த புள்ளி விவரத்தை பார்க்கும்போது, தற்காலிக தீர்வாகத்தான் தெரிகிறதே தவிர, நிரந்தரமாக மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப்பட்டோ, நடைமுறையில் செயல்படுத்தப்படவோ இல்லை. எனவே, மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும்.
 
இலங்கை நமது நட்பு நாடு என்று பெருந்தன்மையோடு இந்தியா நடந்து கொண்டாலும், இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது. மேலும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மீனவர்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி மீன்பிடித் தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும்.
 
இயற்கை நமக்கு அளித்த கொடையான கனிம வளங்களை அதிகாரம் படைத்த கும்பல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டியவர்கள் தடுக்காமல் கனிம வள கொள்ளைக்கு துணை போகின்றனர். கடற்கரை மணல் என்று சொல்லக் கூடிய தாது மணல் கொள்ளையை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்