ஜெயலலிதா உண்மையில் மக்களின் முதல்வர் அல்ல, ஊழலின் முதல்வர் - விஜயகாந்த்

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (14:56 IST)
ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆர்பாட்டத்தின் போது பேசிய அவர் தற்போது மக்களின் முதல்வர் என்று வர்ணிக்கப்படும் ஜெயலலிதா, உண்மையில் ஊழலின் முதல்வர் என்று கடுமையாக சாடினார்.
 
மக்களின் நலனை கருத்தில் கொள்ளாத ஜெயலலிதா எப்படி மக்களின் முதல்வராக முடியும் என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் ஜெயலலிதா தனது சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார். ஆவின் பால் விலை உயர்வை திரும்ப பெறுமாறும் வலியுறுத்தினார். 
 
மேலும் பேசிய அவர் அதிமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பால் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆவினில் நடைபெற்றுள்ள ஊழலை சரி செய்தாலே போதும்,  பால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லையென்றும் கூறினார். ஆவின் ஊழலில் தொடர்புடைய வைத்தியநாதனின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் வலியுறுத்தியுள்ளார். பால் விலையை தொடர்ந்து மின்கட்டணத்தையும் அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக விஜயகாந்த் புகார் தெரிவித்துள்ளார். பால் விலை உயர்வால் ஏழை, நடுத்தர வர்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த ஆர்பாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்