தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த்

வெள்ளி, 19 டிசம்பர் 2014 (15:35 IST)
தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
சென்னை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக, கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. இந்த ஆட்சியில், 2 சதவிகிதம் மட்டுமே சாலைகள் மழையால் சேதமடைந்து உள்ளதாக அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்கிறார். ஆனால் சேதமடைந்த சாலைகள் இன்னும் அதிக அளவில் உள்ளது என்றும், ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை பணிகளை செய்யவில்லை என்றும், தரமற்ற முறையில் சாலைப்பணிகள் செய்ததால் தான் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன என்றும் பொது மக்கள் பலரும் பேசுகின்றனர். 
 
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் சாலைகள் சேதம் அடைந்து உள்ள நிலையில், சாலைகளை சீரமைக்க ரூ.60 கோடி மட்டும் ஒதுக்கினால் எப்படி அனைத்து சாலைகளையும் சீரமைக்கமுடியும். எனவே தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்