அப்துல் கலாமின் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க விஜயகாந்த் கோரிக்கை

வியாழன், 30 ஜூலை 2015 (23:06 IST)
அப்துல் கலாமின் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் உடல், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற கிராமத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
அப்போது, நடைபெற்ற இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது, பிரதமர் மோடியிடம் ஒரு கடிதத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு உலகத்தையே, குறிப்பாக தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் கலாம் பிறந்தவர் என்பதை தாங்கள் நன்கு அறிவீர். 
 
அப்துல் கலாமுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவிக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தவர் கலாம்.
 
தனது வாழ்நாள் முழுவதும் மாணவர் சமூகத்துக்காக பணியாற்றியவர். எனவே, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதி, தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்