உடுமலையில் தலித் மாணவர் கொலை; தமிழக அரசின் மெத்தனம்: தொல்.திருமாவளவன்

செவ்வாய், 15 மார்ச் 2016 (13:34 IST)
உடுமலையில் தலித் மாணவர் சங்கர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.தமிழக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.


 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உடுமலைப்பேட்டையில் தலித் மாணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் (தொல்.திருமாவளவன்) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் அண்மை காலமாக சாதி விட்டு சாதி திருமணம் நடைபெறுவதை எதிர்த்து ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
 
அண்மையில் நாமக்கல்லில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தற்போது உடுமலையில் சங்கர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
 
அவர் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி கவுசல்யாவும் கொடூரமாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணமாகும்.
 
எனவே அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் ஆணவக் கொலையை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் ஜனநாயக சக்திகளும் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்