மூத்த பத்திரிகையாளர் நாத்திகம் பாலு மறைவு

புதன், 7 அக்டோபர் 2015 (04:25 IST)
மூத்த பத்திரிகையாளர் நாத்திகம் பாலு உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார்.
 

 
சென்னையில் மூத்த பத்திரிக்கையாளர் நாத்திகம் பாலு (76). சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு கருத்துக்களை துணிந்து முன்வைப்பவர். விருப்புவெறுப்பு இன்றி செய்திகளை தயார் செய்து பலரது பாராட்டை பெற்றவர்.
 
குறிப்பாக, நவசக்தி, விடுதலை, நவமணி, அலையோசை, மக்கள் குரல் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நாத்திகம் பாலு பணியாற்றியுள்ளார்.
 
மேலும், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர், சி.என்.அண்ணாத்துரை,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோருடன் நல்ல நெருக்கம் கொண்டிருந்தார். அவர்களது பாராட்டையும் பெற்றார்.
 
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக, நாத்திகம் பாலு, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார்.  இந்த நிலையில், அவர் காலமானார். இதனையடுத்து, பாலுவின் உடல், சென்னை அருகில் உள்ள பெருங்களத்தூரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
 
பின்பு, சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நாத்திகம் பாலுவின் உடல் நேற்று பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு சென்னையில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
இதனையடுத்து,  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நாத்திகம் பாலுவின் உடலுக்கு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்