காவல் நிலையத்தில் ஈழத்தமிழர் மரணம்: நீதி விசாரணை தேவை- வேல்முருகன் வலியுறுத்தல்

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (18:08 IST)
பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர் மோகனை போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறி விசாரணைக்காக சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீசார் பள்ளிக்கரனை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு மாரடைப்பால்  உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும்.

இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் காவல்துறையால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்.

அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்