சென்னை நகர் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் அதிதீவிர வர்தா புயல் கரையை கடக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இதுவரை 3,500 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து இடமாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை, வேளச்சேரி அருகே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக மேடான பகுதிக்குச் செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விமான ஓடு தளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் சென்னையில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்கவும் அறிவிப்பு வரும் வரை வீட்டிலேயே இருக்குமாறும், கதவு, ஜன்னல், கூரை போன்றவற்றை புயல் காற்று சேதப்படுத்தலாம் என்பதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்க வருவாய் துறை அமைச்சர் உதய குமார் அறிவுறுத்தியுள்ளார்.