அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளை மாளிகையே அண்ணாந்து பார்த்தது: வைரமுத்து

செவ்வாய், 28 ஜூலை 2015 (11:40 IST)
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது.

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்டபோது வல்லரசுகளெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழிவழி கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல் கலாம்.

அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை.  நாற்பது பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்றும் அதைத் தன் தலையில் சூடிக்கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர். தூங்கிக் காண்பதல்லை கனவு; உங்களைத் தூங்க விடாததே கனவு என்று லட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர்.
தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர்.

அவர் பிரம்மச்சாரிதான், ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச் செல்வம்தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து.தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதிவைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.

அப்துல் கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டேயிருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார். அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன். கண்ணீரோடு வணங்குகிறான் அய்யா  என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்