கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 5 கோடி மக்கள் குடிநீரின்றி தவிப்பர் - வைகோ

சனி, 28 மார்ச் 2015 (18:57 IST)
கர்நாடக அரசின் புதிய அணைகளால் தமிழகத்தில் 15 மாவட்டங்கள் பாதிக்கும், 5 கோடி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
 
மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரியில் மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு மதிமுக ஆதரவு  அளிக்கும். உச்சநீதிமன்றம், கர்நாடகாவில் எந்த விதமான பாசன திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் 11 லட்சம் ஏக்கர்  பாசனத்திற்காக இரண்டு அணைகளை கட்ட உள்ளனர். மேலும், ஹேமாவதி, ஏரங்கி, கிருஷ்ணராஜசாகர், கபினியில் 4 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளனர். 
 
பெரும் வெள்ளத்தில் வரும் உபரிநீரில் ஒருபோக சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. மேகதாதுவில் 48  டிஎம்சி, ராசி மணலில் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கலாம். இந்த தண்ணீரை பெங்களூரு, மைசூர் ஆகிய நகரங்களின் குடிநீருக்கு செல்கிறோம் என கர்நாடக அரசு  கூறுவது ஏமாற்று வேலை. 
 
இந்த அணைகளால் தமிழகத்தில் 15 மாவட்டங்கள் பாதிக்கும். 5 கோடி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுவர். தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன்  திட்டத்தை கொண்டுவரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 7ல் தஞ்சையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்று வைகோ  கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்