வைகோ தவறை உணர்ந்து பாஜகவுடன் இணைந்தால் வரவேற்போம் - தமிழிசை சவுந்திரராஜன்

புதன், 10 டிசம்பர் 2014 (10:47 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவறை உணர்ந்து பாஜகவுடன் இணைந்தால் வரவேற்போம் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
 
நேற்று பாஜக மூத்த தலைவர்களுல் ஒருவரான சுப்பிரமணிய சாமி, “பாமக நிறுவனர் ராமதாஸும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும். அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவும், தலித் மக்களுக்கு எதிரானவராகவும் இருக்கிறார்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
 
ஏற்கனவே மதிமுகவும் பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ள நிலையில், பாமகவும் விலக வேண்டும் என்று அறிவித்திருப்பது குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும், தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர், "தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றிய பலவிதமான செய்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார். அவர் முறைப்படி தான் வெளியேறினார். ஆனால் அவர் பேசிய வார்த்தைகளால் என்றோ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் விலகியதால் எங்களுடைய கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
 
தற்போது, சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்தால் பாமக தொண்டர்கள் கவலை அடைந்தார்கள் என்ற செய்தியை கேட்டு வருத்தமுற்றேன். சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து ஆகும். அகில இந்திய தலைவரிடமோ, மாநில தலைவரிடமோ வரும் கருத்து தான் அதிகாரப்பூர்வமான கருத்து. எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து அங்கம் வகித்து கொண்டு தான் இருக்கிறது" என்று கூறினார்.
 
மேலும், 2016 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, "பாஜகவின், தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் உள்ளே வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறை உணர்ந்து, பாஜகவுடன் இணைந்தால், தான் தமிழகத்தில் மாற்றுசக்தியாக உருவெடுக்க முடியும் என்று நினைத்து வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் கவலைப்படமாட்டோம் என்று அவர் பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்