பல்கலைக்கழக கட்டடம் இடிந்து 5 பேர் பலி: தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

திங்கள், 30 மார்ச் 2015 (09:07 IST)
கட்டட விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி சர்க்கரை மங்கலம் என்ற இடத்தில் மத்திய பல்கலைக்கழக பணியாளர்களுக்கு குடியிருப்புகளும், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வகுப்பறைகளும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இன்று (நேற்று) காலை கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்; 16 பேர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
 
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கட்டுமான விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருவது மிகுந்த கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் மயிலாடுதுறையையும், மற்றவர்கள் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த 16 பேரும் விரைவில் நலமடைய விழைகிறேன். அவர்களுக்கு தமிழக அரசு தரமான மருத்துவம் அளிப்பதுடன், தலா ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்