உடுமலை கவுரவ கொலை : பலியான சங்கரின் மனைவி அரசு வேலை கேட்டு மனு

வியாழன், 2 ஜூன் 2016 (10:20 IST)
உடுமலையில் கவுரவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.


 

 
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவப் படுகொலை செய்தனர்.
 
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பலியான சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 11 மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், கவுசல்யா நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேச சேகரனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
 
அதில் “எனது கணவர் கொலை தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு வக்கீலாக மோகனை நியமிக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்காக வாதட அவர் ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் எனக்கு அரசு வேலை வழங்குவதுடன், கல்வியை நான் தொடர எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்