தலைமையே சும்மா இருக்க... ரஜினி விஷயத்தில் சவுண்ட் விடும் உதயநிதி!!

புதன், 5 பிப்ரவரி 2020 (14:59 IST)
நடிகர் ரஜினிகாந்த இன்று காலை சிஏஏவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் இதனை விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். 
 
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்திய நாட்டிற்கு என்பிஆர் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அதேபோல சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள்.
 
இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்ம பூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்?
அப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன். அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என தூண்டிவிடுகிறார்கள் என பேசினார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின், நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன். ரஜினி தனது கொள்ளை என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்  என விமர்சித்தார். 
ரஜினி பேசும் அனைத்தையும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். ரஜினி போராட்டம் வேண்டாம் என கூறிய போது வயதானவர்களை போராட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என கேலி செய்தார். அதன் பின்னர் முரசொலி, பெரியார் விவகாரத்திலும் விமர்சனத்தை முன்வைத்தார். 
 
பெரும்பாலும், ரஜினி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்காமல் ஒதுங்கினாலும், உதயநிதி முன்வந்து விமர்சனத்தை முன்வைக்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்