வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் உதயகுமார் மனு

புதன், 27 ஆகஸ்ட் 2014 (11:27 IST)
வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கை ரத்து செய்யுமாறு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
 
அவர் தாக்கல் செய்த மனு விவரம்:
 
ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பெற்றதாகவும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியதாகவும் என்மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தெற்காசிய கல்வி மற்றும் சமூக ஆராய்ச்சி மையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த மையத்தின் நிர்வாக அறங்காவலர் பதவி வகிக்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறேன். 
 
இந்த போராட்டத்தை நசுக்கும் நோக்கத்தில் என்மீது தொடரப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இம் மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மனுவுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு நிதி பிரிவு இயக்குநர் மற்றும் சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்