நில அளவையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலி சிக்கினார்

செவ்வாய், 31 மே 2016 (12:21 IST)
கடந்த சனிக்கிழமை 4 மணி அளவில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கே.என்.புதூர் அருகே சாலையோரத்தில் ஒரு கார் எரிந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
மேலும், காரில் இருந்த ஒருவர் தீக்காயங்களுடன் தப்பி ஓடிய நபர் ஒருவரையும் பொது மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஓசூர் நகராட்சி நில அளவையாளர் குவளைச்செழியனை ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தி வந்து காருடன் எரித்துக் கொன்றது தெரிய வந்தது. இவருடன் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் குவளைசெழியனை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது காரில் கடத்தி சென்றுள்ளனர்.
 
பின்னர், இரவு முழுவதும் காரிலேயே சுற்றியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை பொம்மிடி வழியாக ஓமலூர் நோக்கி வந்தபோது மழை பெய்ததால் சாலையில் காரின் சக்கரம் சிக்கிக் கொண்டது. இதனால் பயந்துபோன கும்பல் குவளைசெழியனை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர். பொது மக்கள் வருவதை அறிந்ததும், மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

காவல் துறையினரிடம் சிக்கியவர் மீது தீக்காயம் பட்டதால் தப்பி செல்ல முடியாமல் சிக்கியுள்ளார். கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கூலிப்படையை ஏவியது ஓசூரைச் சேர்ந்த ஒரு பெண் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
 
இதையடுத்து பிடிபட்ட குற்றவாளி கொடுத்த தகவலின்படி சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலில் உள்ள ராஜா, பிரபு, சித்துராஜ், முத்து, சின்னவர், முருகன் ஆகிய 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கூலிப்படையை ஏவியதாக சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்தியாயினி என்ற பெண்ணையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் கார்த்தியாயினி ஏற்கெனவே திருமணம் ஆனவர் அவரது கணவர் பால்ராஜ் ஓசூர் கே.சி.சி. நகர் பகுதியில் கட்டி வரும் வீட்டிற்கு பட்டா வாங்குவதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு மனைவியுடன் செல்வாராம். அப்போது குவளை செழியனுடன் கார்த்தியாயினிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் நெருங்கிப் பழகினர். ஏற்கனவே கார்த்தியாயினிக்கு இம்ரான் என்பவருடன் தொடர்பு இருந்தது. தற்போது புதிய தொடர்பு கிடைத்ததும் இம்ரானுடனான தொடர்பை துண்டித்தார்.
 
இது குறித்த தெரிந்துகொண்ட இம்ரான் கார்த்தியாயினியிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது சர்வேயரிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும் அதனால் அவருடன் நெருங்கிப் பழகுவதாகவும் அவர் கூறினார். மேலும் அவரை கடத்தி பணத்தை பறித்துகொகொண்டால் நாம் அனைவரும் கோடீஸ்வராக வாழலாம் ஆகலாம் என்றும் கார்த்தியாயினி கூறினார். இதையடுத்து சர்வேயரை கடத்த இம்ரான்கான் கூலிப்படை உதவியுடன் கடத்தினான். அப்போது அவரிடம் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் தனது மனைவியிடம் கூறி பணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்
 
இந்நிலையில் சர்வேயரின் மனைவி ஓசூர் போலீசில் புகார் செய்ததால் கோபம் அடைந்த கூலிப்படையினர் குவளை செழியனை காரில் வைத்து கழுத்தை அறுத்து கொன்றனர். பின்னர் காரை தீயிட்டு கொழுத்திவிட்டு அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்