ஸ்டெர்லைட் விவகாரம்: மக்களை ஏமாற்றும் அரசு: டிடிவி தினகரன் காட்டம்!

வியாழன், 29 நவம்பர் 2018 (18:17 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழக அரசை சாடியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அமமுக தலைவர் டிடிவி தினகரன். 
 
அந்த் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.
 
தூத்துக்குடி மாவட்டத்தையே நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மிகவும் பலவீனமான வழிமுறையை கையாண்ட தமிழக அரசின் நடவடிக்கையே, நிபுணர் குழு இந்த அறிக்கை தருவதற்கான முழு காரணம். 
 
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டோம் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மொத்த நடவடிக்கைகளும் மக்களை ஏமாற்றிய ஒரு தந்திர செயல்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக ஓர் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டபோதே, இது தவறான நடைமுறை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டியது. மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தாலும், அதன் சாதக பாதகங்களை சிந்திக்காமல் தமிழக விரோத போக்கை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 
 
இப்படி தொடர்ந்து அநியாயமாக தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும் தமிழக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இனியாவது தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டி உடனடியாக எடுக்க வேண்டும். அதனை சட்டமாக்க வேண்டும் என தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்