மே 23 துரோகம் ஒழிந்த நாள் – பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் !

வெள்ளி, 10 மே 2019 (09:18 IST)
மே 23 ஆம் தேதி தமிழகத்தில் துரோகம் ஒழிந்த நாளாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எல்லாத் தேர்தல்களுக்கான முடிவுகளும் மே 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் 4 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்கும் முனைப்பில் திமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் உள்ளன. திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமுமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ‘ஜெயலலிதா ஆட்சி இல்லை என்று  மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் இடைத்தேர்தலில் மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டியுள்ளார்கள். அதற்குப் பயந்துதான் சபாநாயகரை வைத்து நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. மே 1ஆம் தேதி எப்படி உலகம் முழுக்க உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறதோ அதுபோல இனி வரும் ஆண்டுகளில் மே 23 என்பது துரோகத்தை ஒழித்த நாள் எனத் தமிழக மக்களால் கொண்டாடப்படும் நிலை வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்