தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில், தற்போது மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படிருப்பது கண்டிக்கத்தக்கது.
தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்படும் மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்பு அந்நிறுவனங்களுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. உற்பத்தி பொருட்கள், சேவைகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்களான பொதுமக்கள் மீதுதான் மின் கட்டண உயர்வை தொழில் நிறுவனங்கள் சுமத்தும். எனவே இந்த மின் கட்டண உயர்வு நேரடியாக பொதுமக்களையே பாதிக்கும் என்பது விடியா திமுக அரசுக்கு புரியாதா?
மேலும், கடந்த ஆண்டு மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை போன்ற தொழில் நகரங்களில் உள்ள பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்கள் இன்னும் அவற்றில் இருந்து மீள முடியாத நிலையில், மின் கட்டண உயர்வு தொழில் நிறுவனங்களை மேலும் கடுமையாக பாதிக்கும்.
மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற காரணத்தைக் கூறாமல், மின் கொள்முதல், நிலக்கரி கொள்முதல், வீடு, தொழிலக மின் இணைப்பு வழங்குதல் போன்றவற்றில் நிலவுதாக சொல்லப்படும் முறைகேடுகளை முற்றிலும் களைந்து சீர்த்திருத்தம் செய்தாலே மின்வாரியம் லாபத்தை நோக்கி செயல்பட முடியும். அதை விடுத்து அவ்வப்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வாழ்வை இருளில் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.