எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பறித்த தினகரன் - ஆட்டம் தொடரும்!

புதன், 13 செப்டம்பர் 2017 (10:54 IST)
அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், பொருளாலர் பதவியிலிருந்து திண்டுக்கள் சீனிவாசனையும் நீக்கி டிடிவி தினகரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 

 
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த தினகரன் “பொதுச்செயலாளர் சசிகலா மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். எனவே அவரில்லாத இந்த கூட்டமும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது. இந்த தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும், துரோகமும் கூட்டணி வைத்தும் நடக்கும் ஆட்சியை பொதுமக்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. எனவே இந்த ஆட்சியை விரைவில் அகற்றுவோம்” எனக் கூறியிருந்தார்.
 
மேலும், இனிமேல் அமைதியாக இருக்க மாட்டேன். அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
 
இந்நிலையில், நேற்று இரவோடு இரவாக, அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு, அவருக்கு பதில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. பி. பழனியப்பனை நியமித்தார். அதேபோல், பொருளாளர் பதவியில் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ரங்கசாமி நியமிக்கப்பட்டதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டார்.
 
இப்படி, எடப்பாடி தரப்பும், தினகரன் தரப்பும் மாறி மாறி நீக்கம் செய்து வருவது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்