திருச்சியில் அதிமுகவினரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்!? – திடீர் திருப்பம்!

வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (09:09 IST)
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே சமீபத்தில் கோணி மூட்டையில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருச்சி – கரூர் சாலையில் பெட்டவாய்த்தலை அருகே சாக்கில் பணத்தை வைத்துக் கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்த சிலரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதிமுக நிர்வாகிகள் என்பதும் அவர்கள் வந்த கார் அதிமுக எம்.எல்.ஏ செல்வராசுவின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்றும் தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த பணம் தங்களுக்கு சொந்தமானதில்லை என அவர்கள் அளித்த விளக்கத்தின் பேரில் அவர்களிடம் அதை எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பான தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவினர் அவ்வழியாக பணம் கொண்டு வருவதை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று வழிமறித்து 2 கோடியை கொள்ளையடித்ததாகவும், தேர்தல் பறக்கும் படையினர் வருவது தெரிந்ததும் கொள்ளையடித்த பணத்தோடு அவர்கள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த திலீப்குமார், சுரேஷ், ராஜ்குமார், சிவா, மணிகண்டன், பிரகாஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்