குடிபோதையில் மருத்துவமனையில் ரகளை செய்த பயிற்சி மருத்துவர்: பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்

செவ்வாய், 28 ஜூலை 2015 (18:09 IST)
கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் போதையில் ரகளையில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவரால் நேற்று முன்தினம் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.
 
கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுபவர் செல்வவேல் (24). பண்ருட்டி தாலுகாவை சேர்ந்தவர். நேற்று முன்தினம் பகல் ஷிப்ட் பணி பார்த்தார். இரவு சினிமாவுக்கு சென்று விட்டு மது அருந்திவிட்டு போதையில் இரவு 1.30 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். அப்போது, 108 வாகன ஆம்புலன்ஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
மருத்துவரை  திட்டிவிட்டு ஆம்புலன்சை டிரைவர் எடுத்து சென்றுள்ளார். உடனே, தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு அவரை துரத்த முயன்றார். குடிபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு முன் சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்தார். அங்கிருந்த காவல்துறையினர் அவரை தூக்கி விசாரித்துள்ளனர்.
 
 
அப்போது தான் பயிற்சி மருத்துவர் என்றும் என்னை கேட்க நீங்கள் யார் என செல்வவேல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பயிற்சி மருத்துவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
 
தாக்குதலுக்கு உள்ளானவர் மயக்கம் போட்டு கீழே விழுந்த அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் ரகளையில் ஈடுபட்டார். அவரை படுக்கையில் தள்ளி கை, கால்களை கட்டி மருத்துவர்கள் ஊசி போட்டனர். ஆனாலும் திமிறிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். நள்ளிரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்