ரயில் முன்பதிவு விவகாரம்-மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

திங்கள், 9 நவம்பர் 2015 (01:02 IST)
ரயில் முன்பதிவு விவகாரத்தில், மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனே கைவிட முன்வரவேண்டும் என ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பொது மக்கள் ரயில் பயணத்தை விரும்பிகின்றனர்.  ரயிலில் பயணம் செல்ல விரும்பும் சாதாரண மக்கள் உட்பட அனைத்து மக்களும் தாங்கள் முன்பதிவு செய்த பயணச் சீட்டை அவசர காலங்களில் ரத்து செய்து கொள்ள நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால், ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ப தனித்தனி கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ரயில் புறப்பட்டு சென்ற பிறகு முன்பதிவு செய்த பயணச் சீட்டை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.
 
மேலும், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்த பயணச் சீட்டை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்தால், அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப ரத்து கட்டணம் இரு மடங்கு அதிகரிக்கும் என்றும், இவைகள் அனைத்தும் நவம்பர் 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
 
ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே மிகுருந்த ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மக்களை பாதிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தவிர்க்க முன்வரவேண்டும் என கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்