ஜோக்கர் படத்தின் முடிவு எனக்குப் பிடிக்கவில்லை : டிராபிக் ராமசாமி ஓபன் டாக்

வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (14:12 IST)
சமீபத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தனக்கு உடன்பாடில்லை என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜோக்கர்’. அப்படத்தில் குரு சோமசுந்தரம் என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். சமூக அவலங்களைக் கண்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட கதாநாயகன், தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு செய்யும் செயல்கள்களை இப்படம் விவரித்திருந்தது. இப்படத்தின் முடிவில் கதாநாயகன் மரணம் அடைவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
 
இப்படம் பற்றி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிராபிக் ராமசாமி “ஜோக்கர் படத்தின் முதல் பாதி என்னுடைய கருத்துகளை பிரதிபலிப்பது போல் இருந்தது. ஆனால் படத்தின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. சமூகசேவை செய்யும் கதாநாயகன் மரணம் அடைவதுபோல் காட்டினால், சமூகசேவை பணியில் இறங்க நினைக்கும் மக்கள் மத்தியில் அது பயத்தை ஏற்படுத்தும்.
 
நான் சமூகசேவையில் இருக்கிறேன். பல அரசியல்வாதிகளை எதிர்த்து வருகிறேன். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். தனிமனித கொள்கையுடையவர்கள் எதற்கும் பயப்படக்கூடாது. 
 
என் கருத்தை படத்தின் இயக்குனர் ராஜூமுருகனிடமே தொலைபேசியில் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்