சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, இன்று காலை மதுரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் அருகே வந்தார். அங்கு விதிமுறைகளை மீறி, அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 15க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை அவர் தடுத்தி நிறுத்தினார்.
இதுபற்றி அவர் ஏற்கனவே காவல்துறை மற்றும் வட்டார போக்கு வரத்துத்துறைக்கு தகவல் கொடுத்திருந்ததால், அங்கு போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் வந்தனர்.
அந்த 15 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்வதோடு, ஓட்டுனர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராமசாமி போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இதனால், ராமசாமிக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், தங்கள் ஆட்டோக்களை உடனடியாக விட வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 40 நிமிட பரபரப்பிற்கு பிறகு, போலீசார் அவர்களின் ஆட்டோக்களை திருப்பி தருவதாக வாக்குறுதியளித்தனர். அதன்பேரில், ஓட்டுனர்கள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.