செஞ்சுரி விளாசிய தக்காளி; மிரட்டும் காய்கறிகள் விலை! - கவலையில் பொதுமக்கள்

புதன், 15 ஜூன் 2016 (10:40 IST)
சந்தைகளில் தக்களி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் விழி பிதுங்கி உள்ளனர்.
 

 
கடந்த 3 மாதத்திற்கு முன்பு தக்காளி விலை கிலோ 10 ரூபாய்க்கு சில்லரை விலைக்கு மளிகை கடைகளில் விற்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி 10 மடங்கு உயர்ந்து விட்டது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
 
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்துவிட்டதால் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
சென்னையில் சராசரியாக கிலோவிற்கு கத்திரிக்காய் ரூ.40, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.60, சவ்சவ் ரூ.50, அவரை ரூ.70, வெண்டை ரூ.60, காராமணி ரூ.80, கொத்தவரங்காய் ரூ.70, சேனை ரூ.60, சேம்பு ரூ.50, பிடி கருணை ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.60, வெங்காயம் ரூ.20, முருங்கைக்காய் ரூ.100, ப.மிளகாய் ரூ.50, பச்சை பட்டாணி ரூ.160 என்ற அளவில் கடுமையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
மேலும், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டு வரும் வார சந்தைகள், உழவர் சந்தைகள் மற்றும் சில்லரை காய்கறிக் கடைகளில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை திடீரென உயர்ந்து, அதிகபட்சமாக கிலோ ரூ. 80-க்கும் குறைந்த பட்சமாக ரூ. 70-க்கும் விற்கப்படுகிறது.
 
அதேபோல், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. எந்த காய்கறியும் கிலோ 40-ரூபாய்க்கு குறைவாக கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்