இளங்கோவன் மீது ஆளுநர் ரோசய்யா அவதூறு வழக்கு

புதன், 11 மே 2016 (13:57 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழக ஆளுநர் ரோசைய்யா அவதூறு வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
 

 
கடந்த பிப்ரவரி மாதம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”துணை வேந்தர்களுக்கான பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும். அப்படி நிராகரிக்கப்படவில்லையென்றால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டில் ஆளுநருக்கு தொடர்பிருக்கிறதோ என்கிற ஐயம் அனைவருக்கும் எழுந்துவிடும்” என்று கூறியிருந்தார்.
 
மேலும், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும் அதில் ஆளுநருக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், ஆளுநர் ரோசைய்யா சார்பில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில், மாநகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அதில், ”தனியார் டி.வி. தொலைக்காட்சிக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணை வேந்தர் பதவிக்கு ரூ.15 கோடியை கவர்னர் வாங்குகிறார். அதில் ரூ.10 கோடியை ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ள ரூ.5 கோடியை அவர் வைத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார்.
 
எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், கவர்னர் மீது பொய்யான, உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் மத்தியில் கவர்னருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
 
எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கிரிமின் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்