மூன்று மாணவிகள் மரணம் : எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (13:57 IST)
மூன்று மாணவிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, சர்சைக்குள் சிக்கிய எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


 

 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரியில், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி மோனிஷா, பிரியங்கா, சரண்யா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தனர்.
 
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மாணவிகளின் மரணத்திற்கு, கல்லூரி நிர்வாகமே காரணம் எனப் புகார் கூறிய மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், கல்லூரி தாளாளர் வாசுகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
 
அதில் படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள், அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், ஹோமியோபதி பாடப் பிரிவில் பயின்று வந்த 50 மாணவர்களுக்கு இன்னும் அரசு கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
கைது செய்யப்பட்ட வாசுகிக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார், ஆகஸ்டு மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இந்நிலையில், எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவக் கல்வி பயிற்சி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்