இரண்டு புத்தகங்களுக்கு தமிழக அரசு தடை

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (17:08 IST)
வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது, மதுரை வீரன் உண்மை வரலாறு ஆகிய இரண்டு நூல்களைத் தடைசெய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ஆட்சேபணைக்குரிய தகவல்கள் தடை செய்யப்பட்ட இரு புத்தகங்களிலும் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

 
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசிதழில், இந்தப் புத்தகங்கள் ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் ஜாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் இருப்பதால் இந்தப் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
 
வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது என்ற புத்தகம் செந்தில் மள்ளர் என்பவரால் எழுதப்பட்டு மள்ளர்மீட்புக் களம் என்ற அமைப்பால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
 

 
மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
 
தமிழக அரசு மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்குத் தெரிவித்திருக்கும் ஆட்சேபம் குறித்து, புத்தகத்தை வெளியிட்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமானிடம் கேட்டபோது, மதுரை வீரனின் உண்மையான வரலாற்றை தெரியப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் புத்தகத்தை வெளியிட்டதாகவும் பிற சமூகங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லையென்றும் தெரிவித்தார்.
 
இந்த இரண்டு நூல்களிலும் எந்தெந்தப் பகுதிகள் ஆட்சேபத்திற்குரியவை என்பதையும் இந்த அரசிதழில் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்