மீனவர் பிரச்சனை குறித்த சுஷ்மா சுவராஜின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது: ராமதாஸ் கண்டனம்

வியாழன், 30 ஏப்ரல் 2015 (14:07 IST)
தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தட்டிக்கழிக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும்படி கோருவதற்காக தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் பாரதிய ஜனதா தலைவர்களுடன் நேற்று டெல்லி சென்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.
 
மீனவர்களை சந்தித்து பேசிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்று மீன்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
 
எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். சென்னையில் நேற்று செய்தியாளரிடம் இலங்கை அமைச்சர் சுவாமிநாதன், எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக்கொல்லும் அதிகாரம் இலங்கைக்கு உண்டு என எச்சரித்துள்ளார்.
 
இத்தகைய சூழலில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தட்டிக்கழிக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
 
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிக்க வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். மீனவர்களுக்குக் கூட அந்த எண்ணம் இருக்காது. ஆனால், இயற்கை இதற்கு மாறாக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. 
 
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால்தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் அரிதிலும் அரிதாக நுழைவது தவிர்க்க முடியாதது.
 
கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் நிலைமை மேலும் மோசமாகி விட்டது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வது எப்போதாவது நடந்தால், இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களைத் தாக்குவது அடிக்கடி நடக்கிறது.
 
இவ்வளவு சிக்கலான மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுக்களின் மூலம்தான் தீர்வு காண முடியும். இதை உணர்ந்ததால்தான் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறித்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்குடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
 
இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறும் பேச்சுக்கள் வெற்றி பெறுவதற்கான உதவிகளைச் செய்வதும், அந்த பேச்சுக்களில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த ஒத்துழைப்பதும் மத்திய அரசின் கடமை ஆகும்.
 
அதைவிடுத்து, இலங்கைக் கடற்படையினரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுப்பதற்காகச் சென்ற தமிழக மீனவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்த்து, எல்லை தாண்டி சென்று மீன் பிடித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரிக்கும் வகையில் பேசுவது சரியல்ல.
 
அதுமட்டுமின்றி, மீனவர் பிரச்சனை தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாகவும், பல நேரங்களில் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது தமிழக மீனவர்களை அவமதிக்கும் அவதூறு புகார் ஆகும். இது கண்டிக்கத்தக்கது.
 
தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக பார்க்க மத்திய அரசு தயங்குவதுதான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். தமிழக மீனவர்கள் மீது அவதூறு குற்றச்சாற்று சுமத்துவதை விடுத்து, அவர்களின் நிலை என்ன? எந்த சூழலில் அவர்கள் மீன் பிடிக்கிறார்கள்? என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்