தலைமறைவாக இருந்த தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு முன் ஜாமின்

வியாழன், 26 பிப்ரவரி 2015 (10:36 IST)
சட்டப்பேரவை காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை கைது செய்ய காவல்துறையின் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இரண்டு பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
 
கடந்த 19ஆம் தேதி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சட்டசபை காவலர்களுடன், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலின்போது, சட்டசபை காவலர் விஜயன் தாக்கப்பட்டார். அவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். தாக்குதலில் காயம் அடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
விஜயனிடம், சென்னை கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் கோட்டை காவல்துறையினர், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தினகரன் (கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி), சேகர் (கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி) ஆகிய 2 பேர் மீதும் 3 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்கி சிறு காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளில் இவர்கள் 2 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
2 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ய வடசென்னை இணை கமிஷனர் தினகரன், மாதவரம் துணை கமிஷனர் விமலா ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சேகர் எம்.எல்.ஏ.வுக்கு சென்னை கோயம்பேட்டிலும், புரசைவாக்கத்திலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் உள்ளது. அந்த வீடுகளில் நேற்று அதிகாலையில் தனிப்படையினர் தேடிப்பார்த்தனர்.
 
சேகர் எம்.எல்.ஏ. அங்கு இல்லை என்று தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி ஜெய்கிந்த் நகரில் அவரது குடும்பத்தினர் வசிக்கிறார்கள். அங்கும் அவர் இல்லை. அவர் ஆந்திரா சென்றிருக்கலாம் என்று கருதி தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.
 
இன்னொரு எம்.எல்.ஏ. தினகரனை கைது செய்ய கோவைக்கும் தனிப்படை காவல்துறையினர் சென்றுள்ளனர். இதுவரை இந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது பற்றி காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர்கள் இருவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், கைது செய்ய தனிப்படை தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இதனிடையே, முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவில், " மனுதாரர் இரண்டு பேருக்கும் நிபந்தனை முன்ஜாமின் அளித்து உத்தரவிடுகிறேன். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்கள் ரூ.15 ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் அளிக்க வேண்டும். மேலும் இரண்டு பேரும் இரண்டு வாரங்களுக்கு திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்