முதுமையிலும் நீர்த்துப்போகாத போர்க் குணம் கொண்டவர் மாரியம்மாள்: திருமாவளவன் புகழாராம்

சனி, 7 நவம்பர் 2015 (01:36 IST)
முதுமையிலும் நீர்த்துப்போகாத போர்க் குணத்தோடு கனல்வீசும் நெருப்பாய்க் களமாடிய அன்னை மாரியம்மாளுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவின் அருமைத் தாயார் அன்னை மாரியம்மாள் திடீரென காலமானார் என்னும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
 
அன்னை மாரியம்மாள் 95 வயதைக் கடந்த நிலையிலும், அண்மையில் தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மதுக் கடையை அகற்றும் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனை சிங்கள இனவெறியர்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த கொடுமையைக் கண்டித்து தனது தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தியவர்.
 
வயது முதிர்ந்த நிலையிலும், சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தும், மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தியும் தாமே முன்வந்து களத்தில் போராடிய அன்னை மாரியம்மாள் தீவிர அரசியல் ஈடுபாட்டையும் அவரது போர்க்குணத்தையும் கண்டு தமிழ்ச் சமூகம் வியப்புற்றது.

கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் பாதுகாவல் அரணாக வைகோவின் கலிங்கப்பட்டி இல்லம் இருந்தது என்பதை யாவரும் அறிவோம்.  அக்காலச் சூழலில் ஏராளமான விடுதலைப்புலிகளை தம் இல்லத்தில் தங்க வைத்து உணவு பரிமாறியும், மருத்துவ உதவிகள் செய்தும் பெற்ற பிள்ளைகளைப் பராமரிப்பதுபோல தாயுள்ளத்தோடு விடுதலைப் புலிகளைப் பராமரித்துவந்தார் என்பதையும் உலகம் அறியும்.  தன்னுடைய மகன் உள்வாங்கிய அரசியலுக்கும் நடத்திய போராட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் பல்வேறு அரசியல் நெருக்கடிகளையும் சந்தித்தவர்.
 
நெருக்கடிகளுக்கு அஞ்சி, தானோ தன்னுடைய பிள்ளைகளோ பின்வாங்க வேண்டும் என்று ஒருபோதும் முனையாதவர். வைகோ மற்றும் அவரது இளவல் ரவி ஆகிய இருவரும் ஈழத் தமிழருக்கான விடுதலைக் களத்தில் அதிதீவிரமாக ஈடுபட்ட காலத்தில் அவ்விருவரையும் ஈழவிடுதலைக்காக முழுமையாக ஒப்படைத்து ஊக்கமளித்தவர்.
 
அத்தகைய அர்ப்பணிப்பும் போர்க்குணமும் கொண்ட அன்னை மாரியம்மாள்  காலமாகிவிட்டார் என்பது ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
 
தமது வாழ்வின் இறுதிநாட்களில் தமிழக மக்களைக் காப்பாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி மதுஒழிப்புக் களத்தில் போராடிய ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
 
முதுமையிலும் நீர்த்துப்போகாத போர்க் குணத்தோடு கனல்வீசும் நெருப்பாய்க் களமாடிய அன்னை மாரியம்மாளுக்கு  விடுதலைச்சிறுத்தைகள் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
 
மேலும், அவரை இழந்து வாடும் வைகோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்