மழை வெள்ளத்தில் பலியான 35 உடல்கள் மீட்பு : சென்னையில் பரிதாபம்

வெள்ளி, 4 டிசம்பர் 2015 (13:59 IST)
சென்னையை புரட்டிப்போட்ட மழையில் இதுவரை அடையாளம் தெரியாத 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது, அதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
ஏரிகளுக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில், மக்கள் வசிக்கும் வீடுகளில் சில அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து பலர் தப்பித்து, வீட்டின் மொட்டை மாடிகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர்.
 
பலர் சாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.  அரசாங்கமும், சில தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு முடிந்த அளவில் உதவிகள் செய்து வருகிறது. பல இடங்களில் தங்களுக்கு உதவ எவரும் வரவில்லை என்று ஏராளமான மக்கள் பசித்த வயிரோடு காத்து கிடக்கின்றனர்.
 
கடந்த மூன்று நாட்களில், மூன்றரை லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிகிறது. அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதுவரை சென்னையில், மூழ்கிய வீடுகளுக்குள்ளும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 70 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக தகவல் வெளியனது.
 
தற்போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த, மேலும் 35 பேர்களின் உடல்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. மழைநீர் முழுவதும் வடிந்த பிறகே, அவர்களை பற்றிய விவரங்கள் தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்